விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 89.49 லட்சம் இழப்பீட்டுத் தொகை பெற உரிமை இருந்தபோதிலும், மோட்டார் விபத்தில் இறந்தவரின் கவனக்குறைவுக்காக 15% பிடித்தம் செய்து, ரூ. 76.06 லட்சத்தை மட்டும் செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியத் தவறினால் மரணம் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களுக்கு முழு இழப்பீடும் மறுக்கப்படும். ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்தில் பலியானவரின் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் வயதான தந்தைக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் இருந்து ரூ. 13.42 லட்சத்தை சென்னை உயர் நீதிமன்றம் பிடித்துள்ளது.
பிப்ரவரி 2, 2017-ல் இந்த விபத்து நடந்தபோது பலியானவரின் மனைவி அவருடன் வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். பைபாஸ் சாலையில் தவறான பக்கத்தில் வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி அவர் இறந்தார். இதில் அவரது மனைவி காயங்களுடன் தப்பினார். தந்தை இறந்தபோது 6 வயது மகள் மற்றும் 5 மகன் சார்பாகவும் தனக்கும் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் உள்ள மோட்டார் விபத்தில் காப்பீட்டு இழப்பீடு கோரிய வழக்கில், தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து 2021-ம் ஆண்டில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
34 வயதான விபத்தில் பாதிக்கப்பட்டவரின் மாத வருமானம் ரூ. 47,649 என்று தீர்ப்பாயம் தவறாகக் கருதியதாகவும் அந்த தொகையில் ரூ. 6,674 உதவித்தொகை மற்றும் ஊதிய நிலுவையாக செலுத்தப்பட்டது என்று காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவரது மீதமுள்ள பணிக்காலம் மற்றும் அவரது எதிர்கால வாய்ப்புகள், குடும்பத்திற்கு கூட்டமைப்பு இழப்பு, அன்பு மற்றும் பாசம் இழப்பு, இறுதிச் செலவுகள் மற்றும் பல பிற கூறுகளைச் சேர்த்து மொத்த இழப்பீடாக ரூ. 89.49 லட்சத்தை அடைவதற்கு அவரது மாத வருமானம் ரூ. 40,674 என நிர்ணயம் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, விபத்தில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 89.49 லட்சம் இழப்பீடு வழங்க உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், விபத்தில் இறந்த ராணுவ வீரர் ஹெல்மெட் அணியாததால், பாதிக்கப்பட்டவரின் கவனக்குறைவு காரணமாக இழப்பீட்டுத் தொகையில் 15% பிடித்தம் செய்து அதாவது ரூ. 13.42 லட்சம் பிடித்தம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இழப்பீட்டுத் தொகையில் இருந்து எந்தத் தொகையையும் பிடித்தம் செய்யக் கூடாது என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தபோதிலும், நீதிபதிகள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். காப்பீட்டு நிறுவனம், நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு, ரூ. 76.06 லட்சம் மட்டும் செலுத்த உத்தரவிட்டனர். அதில், இறந்தவரின் மனைவிக்கு ரூ.26.06 லட்சமும், மைனர் குழந்தைகளுக்கு தலா ரூ. 22 லட்சமும், வயதான தந்தைக்கு ரூ. 6 லட்சமும் வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், 2017-ம் ஆண்டு இழப்பீடு கோரப்பட்ட நாளில் இருந்து 7.5% வட்டியுடன் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மைனர் குழந்தைகளின் பங்கை அவர்கள் 18 வயது பூத்தியாகும் வரை தேசிய வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், இந்த இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் செலுத்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 8 வாரங்கள் அவகாசம் அளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.