முகாந்திரம் இருந்தால் தீபா மீது வழக்குப்பதிவு செய்யலாம் - ஐகோர்ட்

முகாந்திரம் இருந்தால் தீபா, ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு

எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா மற்றும் அவரின் கார் ஓட்டுநர் ராஜா ஆகியோர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் தொடர்பான மனுவை விசாரித்து முகந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ராமசந்திரன் ( முட்டை வியாபாரி ) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்தேன். அப்போது என்னிடம் பேசிய தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் ராஜா ஆகியோர், தீபா தற்போது கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும் கடனை திருப்பிச் செலுத்தவும், தி.நகர் வீட்டை புதுப்பிக்கவும் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார் அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை அடையாறு மலர் மருத்துவமனை அருகே எனது காரில் இருந்த 50 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தேன். அதன் பிறகும் கார் ஓட்டுநர் ராஜா, தீபாவின் குடும்ப அபிவிருத்தி மற்றும் செலவுக்காக பணம் வேண்டும் என்றார். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேலும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

அதன்பிறகு அவரின் பேரவையில் பதவி வாங்கி தருவதாக கூறி என்னிடம் பல லட்சங்களை தீபா மற்றும் ராஜா ஆகியோர் பெற்றுள்ளனர். கட்சியில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சராக பதவி வாங்கித் தருகின்றேன் என கூறி, என்னிடம் மொத்தமாக 1 கோடியே 12 லட்சம் ரூபாயை தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் ராஜா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். நான் கடனாகவும், கட்சி பதிவு, அமைச்சர் பதவி தருவதாக மோசடியாக பெற்று பணத்தை திரும்ப கோரிய போது எனக்கு தீபாவும் அவரின் கார் ஓட்டுநர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நான் கடந்த மாதம் 11 ஆம் தேதி (11 ஜனவரி 2018) பெரு நகர சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், எனது புகார் மனு மீது இதுவரை எந்த வழக்குப் பதிவும் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக எனது புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, மனுதராரர் புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி புகார் மீது முகாந்திரம் இருந்தால் தீபா, ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

×Close
×Close