மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க கோரி நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார். அதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்க கூடாது; குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் அபராதம் வசூலிக்க வேண்டும்; சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா – அமித்ஷா தாக்கல்
அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.