டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதாகவும், டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் நேர்ந்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரியும், உயிரழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட கோரியும் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் சுகாதரத்துறை சார்பில் அதன் கூடுதல் செயலர் செல்வகுமார் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்வோர் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர காய்ச்சல் என தனியாக வார்டு இயங்கி வருவதாகவும்,சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் கண்காணிப்பில் டெங்குவை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவாமல் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ள பட்டுள்ளதோடு, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, சேலம் திருநெல்வேலி உள்ளிட்ட 9 மண்டலங்களில் எடிஸ் கொசு உற்பத்தியை கண்காணிக்க பூச்சியியல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் 28,147 பணியாளர்கள் டெங்கு கொசுவை கட்டுப்படுத்தவும், அதன் உற்பத்தி குறித்தும் முன்னெச்சரிக்கை குறித்தும் எடுத்துரைக்கும் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளதாகவும், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் படியும், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் டயர்கள் போன்ற தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துமாறும், குடிதண்ணீர் வைத்துள்ள பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை மூடி வைத்து பயன்படுத்துமாறும் செய்தித்தாள், திரையரங்கம் ஆகியவை மூலம் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, தன்னார்வ சுய உதவிக் குழுக்களையும் விழிப்புணர்வுக்கு ஈடுபடுத்தி வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவு என்று சொல்லும் வகையில் , டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக தமிழகம் முழுதும் 125 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொது மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு இதுவரை 1.07 கோடி பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்குவை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் டெங்கு பற்றிய சந்தேகங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் 104 என்ற அவசர தொலைபேசி எண் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு சிகிச்சை பெற ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் தீவிர கண்காணிப்பின் மூலம் தற்போது டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. எனினும், சுகாதாரத்தை பேணிக் காப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமை என்பதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.