சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை நிர்ணயிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டணம் நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில், 2015 ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த மே மாதம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலும், டி.எம்.எஸ் முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும் என 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது.
இந்த மெட்ரோ ரயில்களுக்கு, புறநகர் மின்சார ரயில்களைப் போல குறைந்தது 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த விஸ்வநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.
புறநகர் ரயில்களை விட 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை மெட்ரோ ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பது மக்களின் பொருளாதார சூழலை பாதிப்பதாகவும் விஸ்வநாதன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு, மெட்ரோ ரயிலுக்கு அரசு தான் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கட்டணம் நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் பணியல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.