/tamil-ie/media/media_files/uploads/2023/05/Kannamalai-1.jpeg)
சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான் தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்டது போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.