ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் ஏன் ? : உயர் நீதிமன்றம் கேள்வி
Chennai high court : மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்,
வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisment
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் ஜூன் 1ஆம் தேதி சரணடைந்த ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்.எஸ். பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாகவும், தொற்று நோய் பரவலை காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி, மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார், பின்னர் ஜாமினை ரத்து செய்ய கோரிய காவல்துறை மனுவிற்கு பதில் அளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூன்19 ஆம் தேதிக்கு தள்ளிவை உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil