கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதியின் இல்லற வாழ்விற்கு இரண்டு வாரம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இல்லற வாழ்விற்கு பரோல்:
திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் எனது கணவர் பெருமாள் என்ற பெத்த பெருமாள் திருநெல்வேலியில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று தற்போது கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு வார பரோல் காலத்தில் தான் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது.
பரோல் காலம் முடிந்த பிறகு எனது கணவர் சிறைக்கு சென்று விட்டார். எனவே தற்போது நாங்கள் இருவரும் இல்லற வாழ்வைத் தொடர இரண்டு மாதம் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரி சிறை கண்காணிப்பாளரிடம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மனு அளித்தேன்.
அந்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவே எங்கள் இருவரின் இல்லற வாழ்விற்கு வசதியாக இரண்டு மாத காலம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எஸ்.ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் முஹம்மது சைபுல்லா அனைத்து குற்றவாளிகளுக்கும் தங்கள் இல்லற வாழ்வை தொடர உரிமை இருப்பதாகவும், ஏற்கனவே இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மனுதாரரின் கணவர் பெருமாளுக்கு எதிராக மேலும் 2 கொலை வழக்குகள் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் இந்த நிலையில் அவருக்கு பரோல் வழங்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து தண்டனை கைதிகளுக்கும் இல்லற வாழ்வை தொடர உரிமை உள்ளது என்ற மனுதரார் வாதத்தை எற்பதாகவும்,
மனுதாரரின் கணவர் பெருமாள் என்ற பெத்த பெருமாளுக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை இரண்டு வார காலம் பரோல் வழங்கப்படுவதாகவும். இந்த இரண்டு வார காலத்திற்கு அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக காவல்துறை உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை அமல்படுத்தி அது தொடர்பான அறிக்கையினை ஜனவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.