மணல் குவாரிகள் மற்றும் மணல் விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு, அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், பொதுத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் அரசு நிர்ணையித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோமாக பயன்படுத்தியதாகவும், கூறி அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு, நீர்வளத்துறை பொறியாளர் முத்தையா, 10 மாவட்ட ஆட்சியர்கள், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை, பொறியாளர் திலகம் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலூர், அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், எம்.ஜோதிமணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரரேசன், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதித்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆட்சியர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்ற இந்த மனு காலாவதியாகிவட்டதாகவும் அவர் கூறிய நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து மனுதாரர் என்ற பெயரில் பொதுத்துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“