Advertisment

கலெக்டர்களுக்கு சம்மன்: ஐகோர்ட்டில் தமிழக அரசு- இ.டி தரப்பு காரசார விவாதம்; தீர்ப்பு தேதி அறிவிப்பு

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்கு; அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தமிழக அரசு வாதம்; நாளை தீர்ப்பு என நீதிபதிகள் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Trichy sand quarries_ED Raid

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்கு; அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தமிழக அரசு வாதம்; நாளை தீர்ப்பு என நீதிபதிகள் அறிவிப்பு

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நாளில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசங்களில் கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், ​​அங்கு நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, சாட்சியாக சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் நவம்பர் 27 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.

இதனையடுத்து இன்று இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? என அமலாக்கத்துறை தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை. விளக்கங்கள் பெறவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

அதேநேரம், கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. சட்ட விரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம், ஆனால் சம்மன் அனுப்ப முடியாது. யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், மணல் குவாரி உரிமைதாரர்களின் தவறுகளுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.4,500 கோடி சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு உதவியாகத்தான் ஆவணங்கள் கேட்கப்பட்டன. முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க கேட்டும் டி.ஜி.பி கொடுக்கவில்லை. அவற்றை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும்? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment