மகனின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி ராபர்ட் பயாஸ் 30 நாள் பரோல் (சிறை விடுப்பு) வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 அண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தற்போது புழல் சிறையில் உள்ள நான் பரோல் கோரி சிறைத்துறை டிஐஜி-க்கு அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், ஆஜராகி, பரோல் கோரிய விண்ணப்பத்தில் மனுதரார் தங்க இருக்கும் முகவரியை தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும் தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயாஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலினையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் பயாசுக்கு பரோல் வழங்க ஆட்சபம் இல்லை என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மகனின் திருமண ஏற்படுகளை கவனிக்க 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.
பரோல் காலத்தில் விதிகளின்படி மனுதரார் செயல்பட வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது அல்லது அவர்களை சந்திப்பது, அல்லது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கூடாது. பரோல் காலத்தில் விதிகளை மீறினால் சிறை விடுப்பை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தார். மேலும் பரோல் காலத்தில் மனுதாரர் 30 நாட்கள் கொட்டிவாக்கத்தில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பரோல் வழங்கப்பட்டுகிறது.
தங்கும் இடம் உள்ளிட்ட விபரங்கள் காவல்துறைக்கு அளிக்க வேண்டும் எனவும் பரோல் காலம் முடிவடைந்தவுடன் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.