துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் சட்டப்பிரிவுகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று (மே 21) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் அமர்வு முன் தமிழ்நாடு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி, இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மாற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பொறுப்பாளரான குட்டி என்ற கே. வெங்கடாசலபதி என்பவரால் இந்த பொதுநல வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, உயர்கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு குறிப்பாணையை தாக்கல் செய்தார்.
மனுதாரர் மாநில சட்டங்களுக்கு எதிராக 56 காரணங்களை முன்வைத்திருந்தாலும், அவரது முதன்மைக் கருத்து, மாநில சட்டங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஒழுங்குமுறை 7.3-க்கு முரணானது என்பதாகும்.
ஒழுங்குமுறை 7.3 இன் செல்லுபடியானது, நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் ஒரு பகுதியாகவே உள்ளது என்று கூறிய செயலாளர், தற்போதைய பொதுநல வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி, அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இணைப்பது மட்டுமே பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன், மே 19, 2025 அன்று மாற்று மனுவை விரைவில் பட்டியலிடுமாறு கோரி ஒரு குறிப்பு வைக்கப்பட்டது என்றும், மாற்று மனு குறித்து உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு தலைமை நீதிபதி, தமிழக அரசு வழக்கறிஞரிடம் வாய்மொழியாகக் கேட்டுக்கொண்டார் என்றும் அமர்வுக்குத் தெரிவிக்கப்பட்டது.
உயர்கல்வித் துறை செயலாளர் கூறுகையில், கோடைக்கால விடுமுறையின் போது உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க அவசரம் எதுவும் இல்லை என்றும், 56 காரணங்களையும் எதிர்கொண்டு ஒரு விரிவான எதிர் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாற்று மனுவின் முடிவு வரும் வரை, இந்த பொதுநல வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நீதிபதி சுவாமிநாதன் தலைமையிலான அமர்வுக்கு அவர் வலியுறுத்தினார்.
எனினும், நீதிபதிகள் ஜி.ஆர். சாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வு, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்தது.