Chennai High Court grants Bail for ACtress Meera Mithun Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் பற்றி அவதூறு கிளப்பியது முதல் ஜோதிகா, சூரியா, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களைத் தரக்குறைவாகப் பேசியது வரை ஏராளமான சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு வந்த மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சமீபத்தில், ஓர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தாக்கி பேசியதற்காகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு, செப்டம்பர் 22 புதன்கிழமை அன்று சென்னை கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், 'தவறு செய்வது மனித இயல்பு' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
திரைப்படத் துறையில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் "கீழ்த்தரமான விஷயங்களை" செய்கிறார்கள் என்றும் அவர்களை துறையை விட்டே அனுப்ப வேண்டிய நேரம் இது என்றும் கூறி காணொளி மூலம் மீரா மிதுன் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட இந்த சாதிவெறி கருத்துகள் கொண்ட வீடியோ வைரலானது. பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.கே) தலைவர், முன்னாள் எம்பியுமான வன்னி அரசு மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் அவருக்கு எதிராகப் புகார் அளித்ததன் பேரில், ஆகஸ்டு 14-ம் தேதி தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் அட்டவணை சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"வழக்கு விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்ட மீரா மிதுன், ஏராளமான வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார், அதில் ஒட்டுமொத்த பட்டியல் இன சாதியினரையும் அவமதிக்கும் பேச்சுக்கள் இருந்தன. மீரா மிதுனுடன் அவருடைய ஆண் நண்பரும் மிகவும் மோசமாக பேசியதற்காக கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் இருவரும் காவலில் இருந்தனர். பெயிலில் இருக்கும் போது தண்டனை விதிகளைப் பயன்படுத்த முடியாது. அதனை விசாரணையின் போது அரசு தரப்புதான் நிரூபிக்க முடியும். அவர்கள் ஐந்து வாரங்கள் காவலில் இருந்ததாலும், தவறு செய்வது மனித இயல்பு என்பதாலும், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க விரும்புகிறது” என்று முதன்மை அமர்வு நீதிபதி ஆர் செல்வகுமார் கூறினார்.
மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு, இரண்டு சியூரிட்டிகளுடன் தலா ரூ.10,000 மதிப்பிலான பத்திரத்தை சமர்ப்பித்தால் பெயிலில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை அவர்கள் தினமும் காலை 10.30 மணிக்குக் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணையின் போது சாட்சிகளை சேதப்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதுமட்டுமின்றி, விசாரணையின் போது அவர்கள் தலைமறைவாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டது. இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும், விசாரணை நீதிமன்றம் சட்டப்படி அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என்று முதன்மை அமர்வு நீதிபதி மேலும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.