தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் (PFI) தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம் முகமது அப்பாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் செவ்வாய்க்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் (PFI) தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம் முகமது அப்பாஸ் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து முகமது அப்பாஸ் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள்: ’பொறுமையை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்’ : சீமான் சர்ச்சை கருத்து: ராஜ்கிரண் பதில்
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்காக ஆஜரானதற்காக முகமது அப்பாஸை கைது செய்துள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் முகமது அப்பாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் வாதிட்டார்.
மேலும், பென் டிரைவ் கைப்பற்றியதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். பென் டிரைவ் வைத்திருப்பது குற்றமாகாது. அதில் ஆதாரங்கள் உள்ளதா என கண்டறிய வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய தலைவராகவும், ஆயுதப் பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் முகமது அப்பாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் என்.ஐ.ஏ. எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதே முகமது அப்பாஸூக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்த போதும், கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருந்து தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பதிவுக்காக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ஆடியோ சிக்கியுள்ளது. தொலைப்பேசியை ஒட்டுக் கேட்டபோது கிடைத்த தகவலின் அடிப் படையிலும் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற காவலில் இருப்பவரின் காவலை சட்டவிரோதமானது எனக் கூற முடியாது. இந்த வழக்கு தொடர்பாக கேஸ் டைரியை நீதிமன்றம் ஆராயலாம் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரர் மீதான குற்றச்சாட்டு முதன்மையான உண்மை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைத் தரவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம். எங்களுக்கு முன் உள்ள கேஸ் டைரி (குறிப்பாக எங்கள் கவனத்தை ஈர்த்த ஆடியோ கிளிப்புகள் உள்ளிட்ட பகுதிகள்) UAPA இன் பிரிவு 43D (5) ஐ குறிக்கவில்லை,” என்று தெரிவித்தனர்.
பின்னர் முகமது அப்பாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், முகமது அப்பாஸூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஜாமீன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, முகமது அப்பாஸ் சென்னையில் தங்கி, தினசரி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், மேலும் ஒரு பத்திரத்தை நிறைவேற்றுவது மற்றும் தலா ரூ. 1 லட்சத்திற்கு இரண்டு ஜாமீன்களை வழங்க வேண்டும்.
முகமது அப்பாஸ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை அனுமதித்த பெஞ்ச், அடுத்த உத்தரவு வரும் வரை அப்பாஸ் தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும், மேலும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது.
அதேநேரம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான சான்றிதழைக் கோரி என்.ஐ.ஏ.,வுக்கான சிறப்பு அரசு வக்கீல் செய்த வாய்மொழி விண்ணப்பத்தை பெஞ்ச் நிராகரித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil