New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/hc-2.jpg)
Tamil Nadu News Today live updates
Chennai high court : சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tamil Nadu News Today live updates
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12 தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செப்டம்பர் 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் கோரி இவர்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அம்மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தரப்பில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும், எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்ற மனுதாரர் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நீதிபதி, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதாக இரு நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டதே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என, அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயகோபாலுக்கும், மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஆலந்தூர் நீதிமன்றம் சம்மன் பெற்று ஆஜரான பின், பள்ளிக்கரணை போலீசில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேகநாதனைப் பொறுத்தவரை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.