மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தயாநிதி மாறன் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பாக தயாநிதி மாறன் போட்டியிட்டார். அப்போது, சுமார் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி, இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17-ஆம் தேதி நிறைவடைந்தது. எனினும், ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற அன்று பத்திரிகை வாயிலாக தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது.
இதேபோல், பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்டுகளுக்கு செலவிட்ட தொகை போன்றவற்றை முறையாக தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையம் அனுமதித்த ரூ. 95 லட்சத்த விட, தயாநிதி மாறன் அதிகமாக செலவிட்டார். இதன் காரணமாக தயாநிதி மாறன் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்தக் காரணங்களும் இல்லை" எனக் கூறிய நீதிபதி வழகை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் தயாநிதி மாறனின் வெற்றி செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.