வெளிமாநில தொழிலாளர்களை அனுப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி
1 லட்சத்து 799 வெளிமாநில தொழிலாளர்கள் அரசின் செலவில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிபதிகள்,சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் திரும்ப மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை மே 26-இல் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
1 லட்சத்து 799 வெளிமாநில தொழிலாளர்கள் அரசின் செலவில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisment
சென்னை கொளத்துரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி திலக்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் முன்பு அவர்கள் தங்குவதற்கு சமூக நல கூட விவரங்கள் அறிவிக்கவேண்டும், வெளியூர் செல்வதற்கான ரயில் விவரங்களை இணையதளத்தில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளிலும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாரயணன், அனிதா சுமந்த் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாரயண், இதற்காக நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டு மற்ற மாநில அதிகாரிகளுடன் பேசி வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பவது தொடர்பாக ஒருங்கிணைத்துவருவதாக தெரிவித்தார். மேலும், இந்த பணி சுமூகமாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
பதிவு பெற்ற சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களில் ஒரு லட்சத்து 799 தொழிலாளர்கள் தமிழக அரசின் செலவில் அனுபப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் சார்பில் இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும்,சில மாநிலங்கள் அனுமதிக்க மறுப்பதாகவும் தெரிவித்தார். மாநில அரசுகள் தயாராக இருந்தால் , சிறப்பு ரயில்களை இயக்க தயார் என்று குறிப்பிட்டார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள்,சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் திரும்ப தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டு மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை வரும் 26 ம்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"