Advertisment

பேனர் விபத்து - அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

Chennai high court : ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேனர் விபத்து - அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதில், கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர், அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.

Advertisment

தமிழகத்தில் சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்யநாராயணன் என். சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் டிராபிக் ராமசாமி ஆஜராகி, சட்டவிரோத பேனர் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு மதிப்பதில்லை எனவும் இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சட்ட விதிகளுக்கு புறம்பாக பேனர்கள் வைப்பதில் எவ்வாறு அரசு அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள் என கேள்வி எழுப்பினர்.

தனிப்பட்ட நபர்கள் அல்லது அரசியல் கட்சியினரின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு எப்படி சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்க அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சட்டவிரோத பேனர்களை பொருத்தவரை நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் இன்னும் இந்த விஷயத்தில் எத்தனை மரணங்களை அரசும், அதிகாரிகளும் எதிர்பார்க்கிறது எனவும் இன்னும் எவ்வளவு இரத்தங்களை உறிஞ்ச நினைக்கிறார்கள் எனவும் நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

இந்த விஷயத்தை பொறுத்தவரை அரசின் மீதான நம்பிக்கையை இந்த நீதிமன்றம் இழந்து விட்டதாகவும், இதுவரை எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தும் அதில் இதுவரை எந்தவிதமான பலனும் இல்லை எனவும் நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தனர். நீதிபதியின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு தலைமை வழக்கறிஞர் திணறினார்.

காதணி விழா கிடா வெட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைத்தால்தான் விருந்தினர்கள் வருவார்களா? இல்லையென்றால் வரமாட்டார்களா? அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைத்தால்தான் அமைச்சர்களுக்கு வழி தெரியுமா? இல்லை என்றால் அவர்கள் தொலைந்து விடுவார்களா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜனநாயக நாட்டில் உயிரின் மதிப்பு பற்றி தெரியவில்லையா? என கூறிய நீதிபதிகள் ஒரு உயிரின் மதிப்பு அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்படும் போது அரசு அல்லது கட்சிகள் கருணைத் தொகை கொடுக்கின்றார்கள் பின்னர் அந்த பிரச்சினை முடிந்து விட்டதாக கருதுகின்றனர். இறந்தவரின் உயிரை சம்மந்தபட்டவர்களால் வர வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என அதிகாரிகளும் அரசும் நினைக்கிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள். ஏற்கனவே கோவையில் நடைபெற்ற சம்பவம் போன்று தான் நேற்றைய சம்பவமும் நடைபெற்றுள்ளது என கருத்து தெரிவித்தனர். குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவது அரசும், அதிகாரிகளும் வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

பேனர்கள் வைக்க கூடாது என ஏன் தங்கள் கட்சியினருக்கும் அரசியல் கட்சி தலைவர்களும் முதலமைச்சரும் அறிக்கை வெளியிட கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கடற்கரைச் சாலையில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தள்ளிவைப்பதாகவும் அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர்.

முன்னதாக காலை வழக்கு விசாரணை தொடங்கிய போது வழக்கறிஞர் கண்ணதாசன், லட்சுமி நாராயணன் ஆகியோர் நீதிபதிகள் சத்தியநாரயணன் சேஷசாயி அமர்வில் முறையீட்டனர்.

பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பேனர்கள் வைப்பதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் உரிய முறையில் பின்பற்றவில்லை. மெத்தனமாக உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேனர் விசயத்தில் நீதிமன்ற உத்தரவுகளை அதிகரிகள் உரிய முறையில் பின்பற்றவில்லை. ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை. தலைமை செயலகத்தை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றுங்கள் என மட்டும் தான் நாங்கள் உத்தரவிடவில்லை, ஆளும் கட்சி தான் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சட்ட விரோத பேனர்கள் வைக்கின்றனர்.

மக்களின் ரத்தத்தை உறிபவர்கள் போல அரசு அதிகாரிகள் உள்ளனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் அதிகாரிகள் ஆளும் அரசியலில் கட்சியின் முகவர்களாக மாறுகின்றனர். விபத்து ஏற்படும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு மட்டும் அளித்து அதிகாரிகள் பிரச்சினை முடித்துக் கொள்கிறார்கள் என நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு:

பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பணியில் கவனக்குறைவு, அலட்சியத்திற்காக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதை தலைமை செயலாளர் கண்காணிக்க வேண்டும் என்றும் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலை தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், இடைக்கால இழப்பீடை அரசு வழங்க வேண்டும், பின்னர் அதை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும், சுபஸ்ரீ குடும்பத்துக்கு 5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்வும், விசாரணை குறித்த அறிக்கையை பரங்கிமலை காவல்துறை, மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்காணிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நீதிமன்றமும் கண்காணிக்கும் என்று கூறி, வழக்கை 19.09.2019 தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment