உண்மையான தகவல்களை மறைத்து பொது நல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த நபர் ஓராண்டுக்கு அனுமதியின்றி பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்தது.
திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர், திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும், நிலத்தை அளவீடு செய்து அது வனப்பகுதி நிலம் என அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து 17 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு உரிய காரணங்கள் விளக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மனுதாரரின் வயது, வருமானம் குறித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் வகை மாற்றம் குறித்த உண்மைகளை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, 20 லட்சம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த 20 லட்சம் ரூபாய் அபராதத் தொகையில், இந்த வழக்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு 10 லட்சம் ரூபாயும் 4 வாரங்களில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ராஜ்மோகன் ஓராண்டுக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி பொது நல வழக்கு தாக்கல் செய்ய தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“