ஐகோர்ட் தடையை அடுத்து செவிலியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ்!

நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து செவிலியர்கள் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்று நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப்பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். இன்று முதல் அவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், ஒரு பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி, போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், அங்கு போராட்டம் நடந்து வரும் டி.எம்.எஸ் வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தனர். மூன்று நாட்களாக அவர்கள் உள்ளே விடப்படவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்கையில், “உங்களை உள்ளே விடக் கூடாது என நாங்கள் எதுவும் உத்தரவிடவில்லையே” என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசுகையில், “டி.எம்.எஸ். தரப்பில் தான் செய்தியாளர்களை உள்ளேவிடக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளனர் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் சிலர், டி.எம்.எஸ். கேட் வாயிலில் அமர்ந்து அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

விஷயம், காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவர, தற்போது பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் அவர்கள் செய்தி சேகரித்து வருகின்றனர்.  இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவிலியர்கள் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி அமர்வு வெளியிட்டுள்ள உத்தரவில், “போராட்டத்தை கைவிடாவிட்டால் செவிலியர்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்காது. அரசு மருத்துவமனையை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே நாடி வருகின்றனர். செவிலியர் வேலையில் சம்பளம் போதவில்லை எனில், வேறு வேலைக்குச் செல்லலாம். செவிலியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது.

நீங்கள் அனைவரும் பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். செவிலியர் சங்கத்தில் யாரேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் அது சட்டவிரோதமாக கருதப்படும்” என்று கூறி, செவலியர் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை 05:30 – போராட்டத்தை கைவிட்டு நாளை பணி நேரத்தில் செவிலியர்கள் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு. பணிக்கு திரும்ப நாளை மாலை வரை செவிலியர்கள் அவகாசம் கேட்டதற்கு பதில் அளித்த நீதிமன்றம், “போராட்டம் என்றால்  உடனே ஒன்று கூடுகிறீர்கள்; பணி என்றால் அவகாசம்  கேட்பீர்களா?” என்று கூறி, நாளை பணி நேரத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மாலை 05:35 – நாளை காலை அனைவரும் பணியில் சேருங்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேசிய அதிகாரிகள், “நாளைக்கு அனைவரும் பணிக்கு திரும்புங்கள். நாங்கள் உங்களை கைவிட மாட்டோம், உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால், இதையும் நிராகரித்தால், எங்களால் மட்டுமல்ல, யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது. உங்களின் 90% கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்றனர்.

மாலை 05:45 – நீதிமன்ற உத்தரவை மதிக்கின்றோம். பேச்சுவார்த்தை குறித்த தேதியை அறிவிக்க வேண்டும்.  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வ கடிதத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் செவிலியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாலை 06:10 – நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து செவிலியர்கள் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai high court interim ban for nurses protest at chennai

Next Story
அதிமுக வங்கி கணக்குகளை பார்வையிட தினகரன் தரப்புக்கு நீதிமன்றம் அனுமதிchennai high court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com