புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகனங்களை பதிவு செய்ய வேண்டுமென்ற தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாகன விற்பனை முகவர்கள் சம்மேளனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், வாகனங்களை பதிவு செய்ய வாகனம் வாங்குபவர்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட டீலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தமிழக போக்குவரத்து ஆணையர் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது சட்டபடி செல்லாத ஒன்று எனவே இதனை ரத்து செய்ய வேண்டும்.
வாகனத்தை வாங்குபவர்கள் அதனை யார் ஒட்ட வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த உத்தரவு மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானது எனவே அரசின் இந்த சுற்றறிக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சிறுவர்கள் பெயரிலும், மாற்று திறனாளிகள் பெயரிலும், அறக்கட்டளை பெயரிலும் வாகனங்கள் வாங்கப்படுவதுண்டு ஆனால் அவர்கள் வாகனங்களை இயக்குவது கிடையாது என வாதிட்டார். மேலும் வாகனம் வாங்குபவர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது நடைமுடை சாத்தியமில்லாதது எனவும் வாதிட்டார். இதைப்போல வாகன ஓட்டும் பணியில் உள்ளவர்களுக்கும் தொழில் பாதிப்பு ஏற்படும் எனவும் வாதிட்டார்.
விசாரணைக்கு பிறகு நீதிபதி, தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு நான்கு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.