சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்த வழக்கை, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் தகவலை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எஃப்.ஐ.ஆர் நகலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
இந்நிலையில், மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. வழக்கறிஞர் வரலட்சுமி கடிதத்தின் அடிப்படையில், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்பேரில், உள்துறை செயலாளர், டி.ஜி.பி, மாநகர காவல் ஆணையர், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.