மத்திய சென்னை தொகுதி மக்களவைத் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தயாநிதி மாறன் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொகுதியின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளான்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை எனவும், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 95 லட்சம் ரூபாயை விட அதிக தொகையை தயாநிதி மாறன் செலவிட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதால் தேர்தலை செல்லாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு 'மௌன காலம்' கடைப்பிடிப்பதன் நோக்கம் வாக்காளர்கள் வெளிப்புற தூண்டுதல்களால் பாதிக்கப்படாமல் ஒரு முடிவை எடுக்க அனுமதிப்பதாகவும், ஆனால் எம்.பி தயாநிதி மாறனின் கட்சி அப்பட்டமாக விதியை மீறியதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் டி.சிவஞானசம்பந்தன் கூறினார்.
தயாநிதி மாறன் தனது தொகுதியில் உள்ள எல்லா வீடுகளிலும் ஸ்டிக்கர்களை ஒட்டியதாகவும், ஆனால் தனது கணக்கில் செலவினத்தைச் சேர்க்கவில்லை என்றும் மனுதாரர் கூறினார். ஒவ்வொரு ஸ்டிக்கருக்கும் ரூ.15 என மதிப்பிட்டாலும், அந்தத் தொகுதியில் சுமார் 3,90,000 வீடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அந்த ஸ்டிக்கரின் மொத்த மதிப்பு ரூ.58.50 லட்சமாக இருக்கும். இத்தொகை, எம்.பி.யின் செலவின அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என, வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், 1,153 பூத் ஏஜெண்டுகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிச் செலவுக்காக செலவிடப்பட்ட பணம் மற்றும் மேசைகள் மற்றும் நாற்காலிகளுக்கான வாடகையை தயாநிதி மாறன் தெரிவிக்கவில்லை என்றும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பிரச்சாரத்தில் சுமார் 10,000 பலூன்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய மனுதாரர், அதற்கான செலவும் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து, மனு தொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், மற்றொரு தேர்தல் வழக்கில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த நைனார் நாகேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி சி. ராபர்ட் புரூஸுக்கு நான்கு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.