மக்கள் வரி பணம் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற தீபா மற்றும் தீபக் ஆகியோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்களது ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் ரூ. 100 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட 10 கிரவுண்ட் நிலத்தை வெறும் ரூ. 35 கோடிக்கு எடுப்பதாக அரசு அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரை நிலைக்க செய்வதற்கு பல வழிகள் இருக்கும் போது மக்கள் பணத்தில் நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.. மேலும், அமைச்சர்கள் கூட தினமும் தங்கள் பேச்சை தொடங்கும்போதே, ஜெயலலிதாவை புகழ்ந்துதானே பேச தொடங்குகிறார்கள் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.