ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு தி.மு.க – அ.தி.மு.க கட்சியினர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
மதுரையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்லூர் ராஜு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. எனது கருத்தை மட்டுமே தெரிவித்தேன்” என செல்லூர் ராஜு தரப்பில் வாதிடப்பட்டது ஆனால் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செல்லூர் ராஜு பேசியுள்ளதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, நீதிபதி வேல்முருகன், ”தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை. மாறாக மாறி மாறி இருவரும் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளீர்கள். சாதனையை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை. இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும்?, இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்” என்று அதிருப்தி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சில் எந்த அவதூறும் இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிபதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ஒரு அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டுவதை இன்றைய நிலையாக கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.