Chennai-high-court: தமிழ்நாட்டின் சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக "தமிழை" அறிவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நீண்ட நாள் கோரிக்கையாக வைத்து வருகிறார்கள். இதற்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி பகவத் சிங் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிமன்றங்களுக்குள் தமிழை அலுவல் மொழியாக்க நல்ல மொழிபெயர்ப்புகள் தேவை என்றும் ஆங்கில சட்டப் புத்தகங்களை எளிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாத இத்தகைய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது மட்டுமே விரும்பிய முடிவை உறுதிப்படுத்தாது என்றும், ஆங்கில சட்டப் புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு கட்டப்பட்ட வலுவான அடித்தளம் மட்டுமே இதற்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசின் சட்டச் செயலாளராக இருந்தபோது, அவரது சொந்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்டதை நினைவு கூர்ந்த நீதிபதி, குறைந்தது 10 வழக்கறிஞர்களாவது தலா பத்து வார்த்தைகள் கொண்ட தமிழ் சட்ட அகராதியைத் தயாரித்து வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
"இந்த முயற்சி மக்களிடமிருந்து வர வேண்டும், அரசாங்கத்திடமிருந்து மட்டும் அல்ல. அனைத்து சட்டப் புத்தகங்களும் எளிய தமிழில் மொழி பெயர்க்கப்படுவதையும், புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்."என்றும் கூறிய நீதிபதி ஜெயச்சந்திரன், எதிர்காலத்தில் சட்டங்கள் முழுவதுமாக இந்தியில் வரலாம் என்றும் எச்சரித்தார்.
இருப்பினும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எளிய சொற்களைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தமிழில் ஒரு சில வழக்கறிஞர்கள் முன்னேறி வருவதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“