கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனுவில் அவரின் கணவரின் வருமானத்தை முறையாக தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தமிழிசை மனுவில், மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், கனிமொழி தன் கணவர் வருமானத்தை மறைத்தது தவறு எனவும், பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது..
வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த மனுவில் கனிமொழியின் கணவர் சொத்து மற்றும் அவரின் வருமானம் குறித்த எந்த தகவலும் முறையாக இல்லை எனவே அவரின் வேட்பு ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது. அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழிசை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து மனு குறித்து தொகுதி வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க ஏதுவாக உரிய நோட்டீஸை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட நீதிபதி விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையே தூத்துக்குடி வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு விசாரணை அக்டோபர் 14 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.