தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதற்கான டெண்டரில் குறைந்த கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த டெண்டர் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 ஆண்டுகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு, நீதிபதிகள், தமிழகத்தில் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் பார்களிலேயே நடக்கின்றன எனவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களும், இழப்புகளும் அதிகரிக்கின்றன. மாணவ, மாணவிகள் மதுவுக்கு அடிமையாவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது எனவும், டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஏன் மாற்றக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பார்களுக்கான டெண்டர் அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கென வெளியானது ஏன்? என கேள்வி எழுப்பி, இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.