திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி அனுப்பிய மனுவைச் சட்டப்படி பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு என்னைக் கைது செய்து, எனது 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். ஜாமீனில் விடுதலையானபோதும் எனது செல்போன்களை என்னிடம் திரும்ப வழங்கவில்லை.
செல்போன்களை கேட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11-ல் வழக்குத் தொடர்ந்தேன்.
இந்நிலையில், ஜூலை 14-ல் எனது செல்போனிலிருந்த குரல் பதிவுகள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியாகின. இது தொடர்பாக விசாரித்தபோது, தற்போது திருச்சி மண்டல டி.ஐ.ஜி-யாக இருக்கும் வருண்குமார் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, எனது செல்போனில் இருந்த குரல் பதிவுகளை அவரது பள்ளித் தோழரான திருச்சி சூர்யாவிடம் வழங்கியுள்ளார். பின்னர், அந்தப் பதிவுகளை திருச்சி சூர்யா, தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் வருண்குமார், நாம் தமிழர் கட்சி குறித்து தவறாகப் பேசியுள்ளார். அவர் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சியை நசுக்க முயன்று வருகிறார்.
அவரது இந்த நடவடிக்கைகள் பொது ஊழியர்கள் விதிகளுக்கு எதிரானவை. எனவே, வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டி.ஜி.பி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மனுவின் அடிப்படையில் ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், "இந்த மனுவை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து, தமிழக டி.ஜி.பி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
க.சண்முகவடிவேல்