சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பு முடித்திருக்கிறேன். எனவே நான் சித்த மருத்துவ கிளினிக் நடத்துவதில் காவல்துறையினர் தலையிடக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் தரப்பில், தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்த மருத்துவ சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க இயலாது என சான்றிதழில் சிறிய எழுத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம் என கூறப்பட்டது.
இதனையடுத்து, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது. தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க இயலாது என சிறிய எழுத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம் எனக் கூறுவது, சிகரெட் அட்டையில் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என சிறிய எழுத்தில் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. சிகரெட் கம்பெனிக்கும் தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா? என்று நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், சித்தா சான்றிதழ் படிப்பு வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யு.ஜி.சி) அனுமதி பெறப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பை நடத்தினால், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஏன் பரிந்துரைக்கக் கூடாது என காட்டமாக கூறினார்.
தொடர்ந்து, இதுவரை தமிழ் பல்கலைக்கழகம் எத்தனை மாணவர்களுக்கு சித்தா சான்றிதழ் படிப்புக்கான சான்றிதழ் வழங்கியுள்ளது என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“