/tamil-ie/media/media_files/uploads/2022/08/Madurai-High-Court.jpg)
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், அவர்களின் தலைவர்களின் சிலைகள் மற்றும் கொடிகளை பொது இடங்களில் நிறுவுவது ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முத்துக்கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது; ”திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் தான் உள்ளது. இருப்பினும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் எம்.ஜி.ஆர். சிலை அதன் அருகில் உள்ள கட்சிக்கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
எம்.ஜி.ஆர். சிலையை அகற்றக்கூடாது என அ.தி.மு.க. சார்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் சிலையை தன்னிச்சையாக அகற்றக்கூடாது, எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டால் மக்கள் வருத்தமடைவார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சிலை மற்றும் அதனருகில் உள்ள அ.தி.மு.க. கொடியை அகற்ற வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தலைவர்களின் சிலைகளை கட்சி அலுவலகங்களில் மட்டுமே நிறுவ வேண்டும் என்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அவை இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.