தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராசு மகன் சரவணன், திருமணம் முடிந்து மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பெரிய குளம் பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி சிறுமியிடம், சரவணன் ஆசை வார்த்தைகளை கூறி அவரை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைத்ததை அடுத்து சரவணன், சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
பிறகு இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே, பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி, தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் சரவணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இது குறித்த வழக்கு தேனி மாவட்ட மகிளா விரைவு மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது, நீதிபதி 20.05.2019 அன்று சரவணனை குற்ற வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்ததின் பேரில், இவ்வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார். இந்த நிலையில் வழக்கின் இறுதி முடிவில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பூர்ணிமா அடங்கிய பெஞ்ச் சரவணனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.