2000ஆம் ஆண்டுக்கு பிறகு நீர் நிலைப்பகுதிகளில் வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீர்நிலைகளின் முழு விவரங்கள் அடங்கிய இணையதளத்தை 6 மாதத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை வண்டியூர் கண்மாய் கரையில் மேம்பாலம், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளை அழித்து, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என்று மதுரையை சேர்ந்த மணிபாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாலம் மற்றும் இருவழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடங்களில், ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜி.ஆர்.சாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர், நீர்நிலை பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இந்த திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தபோது, இத்திட்டத்தை செயல்படுத்தினால் நீர்நிலைகளின் பரப்பளவு குறையாது, சேமிப்புதிறன் அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலை மற்றும் மேம்பால பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்படுகிறது. அதே சமயம் மக்கள் நலன் என்ற பெயரில் நீர்நிலைகளை அழிக்க முடியாது. மதுரை மாநகரில் பெரிய நீர்நிலைகள் ஏற்கனவே காணாமல் போயுள்ளது என்பதை கவனத்தில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்காக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் சார்பில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதல் இலக்காக நீர்நிலையைத்தான் தேர்வு செய்கிறார்கள். பல நீதிமன்ற வளாகங்களே நீர்நிலையில் தான் அமைந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விவரங்களைக்கொண்ட இணையதளத்தை 6 மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும்.
இந்த இணையதளத்தில், ஒவ்வொரு நீர்நிலையையும் (குளங்கள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள் போன்றவை உள்பட) தொடர்புடைய சர்வே எண், பகுதி, கிராமம், தாலுகா, மாவட்டம் என அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் உள்ள விவரங்கள் தவறானவை என்பது தெரிந்தால், தனிநபர் யார் வேண்டுமானாலும் இந்த கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதன்பேரில் தவறான தரவுகளை பதிவேற்றம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 1.1.2000-க்குப் பிறகு நீர்நிலைகள் பழைய நிலைக்கு மீட்க வேண்டும். நீர்நிலைகளின் ஒருமைப்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். நீர்நிலைகள் சமுதாயத்திற்கு சொந்தமானவை. தொழில்நுட்ப ரீதியாக அவை அரசாங்கத்துக்கு சொந்தமானவையாக இருக்கலாம். அவை இயற்கையின் கொடை என்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கிடைக்க வேண்டும்.
நீர்நிலைகள் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டதை நாம் பார்க்க முடிகிறது. நீர்நிலைகளின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பராமரிப்பது அதிகாரிகளின் கடமை" என்றும் தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.