மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கிட்டு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு செல்லும்போது நுழைவுக்கட்டணம் பல்வேறு இடங்களில் தனித்தனியாக வசூலிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் நுழைவு கட்டணம் வசூலித்தாலும், அதற்கான அடிப்படை வசதிகளான,வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிப்பிடம் ,குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் மேலும் வாகன திருட்டு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாரயணன்,சேசஷாயி ஏன் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
மனுதாரரின் புகார் குறித்து 6 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.அடுத்த வாரம் முக்கிய நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதால் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்..