மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை பயன்படுத்தி சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் 100 வறண்ட ஏரிகளை நிரப்ப வழிவகை செய்யும் திட்டத்தின் 565 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிய பின், உபரி நீர் வீணாக கடலில் கலக்காமல், அதை 100 வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விடுவது தொடர்பான சரபங்கா நீரேற்று திட்டம் தீட்டப்பட்டது. 4,238 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் இந்த திட்டத்திற்காக, 565 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, இந்த டெண்டரை ரத்து செய்யக் கோரி சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருள்நம்பி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டெண்டர் நடைமுறைகளை தொடரலாம் எனவும், டெண்டரை இறுதி செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், டெண்டர் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத மனுதாரர், இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமையில்லை எனவும், அனைத்து விதிகளும் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
பாசனத் திட்ட வல்லுனர்கள் மூலம் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அதிக தொகைக்கு கோரப்படும் டெண்டர்களை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை ஏற்றுக் கொண்டால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விடுவதாகவும் கூறிய நீதிபதிகள், விதிமீறல்கள் இல்லாத நிலையில், பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறையை தவறாக பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.