பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொது செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், தேர்தலை நடத்த அனுமதித்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டார். அத்ன்படி, ஜூன் 23 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
விஷால் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளித்த சங்கங்களின் பதிவாளர், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரியை நியமித்தது தேர்தல் நடத்த முடியாது என்றும், பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதவிக்காலம் முடிந்த பின் சங்க நடவடிக்கைகளை கவனிக்கவும், தேர்தலை நடத்தவும் கூடாது என்று தடை செய்ய எந்த சட்ட விதிகளும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, பதவிக்காலம் முடிந்த பின்னர் தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா என்பது குறித்தும் விளக்க மனு தாக்கல் செய்யும்படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 20 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.