நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த இரண்டு மசோதாக்களை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
2017- 18 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன் இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நாடாளுமன்ற குழு பரிந்துரைப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே தங்கள் சொந்த நடைமுறையை பின்பற்றி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தால் அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது என்றும் அவருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கிடைத்திருக்கும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 2017 பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளதாகவும், அவற்றை 2017 செப்டம்பரில் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அறிக்கை தாக்கல் செய்த மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா, நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் 2017 பிப்ரவரி 20 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெற்றது. மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் படி அன்றைய தினமே சட்டம் மற்றும் நீதி, சுகாதாரம், மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த துறைகளில் கருத்துக்களை பெற்ற 2017 செப்டம்பர் 11 ஆம் தேதி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செப்டம்பர் 18 ஆம் தேதி இரண்டு மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். பின்னர், செப்டம்பர் 22 ஆம் தேதி இரண்டு மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது என அந்த பதில் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. வழக்கு இன்று ( 17-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.