சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹி, வரும் 11 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹீல் ரமணி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த இடம் காலியாக இருந்து வந்தது.
இதனையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை குடியரசு தலைவர் நியமித்தார்.
காலியாக இருந்து வரும் தலைமை நீதிபதி பணியிடத்திற்கு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் ஏ.பி. சஹியை நியமிக்க உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து, கடந்த 30 ஆம் தேதி அமரேஷ்வர் பிரதாப் சஹியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். மேலும், நவம்பர் 13ஆம் தேதிக்குள் அவர் பதவியேற்கவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹி, வரும் 11 தேதி பதவி ஏற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்க உள்ளார்.
இதற்காக புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹி வரும் 10 ஆம் தேதி சென்னை வரவுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்படுகளை உயர்நீதிமன்ற பதிவுத்துறையும், ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.
புதிய தலைமை நீதிபதி சஹி, 1959 ஜனவரி 1ஆம் தேதி பிறந்தவர். 1985இல் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியை துவக்கினார். சிவில் மற்றும் அரசியல் சாசன வழக்குகளில் ஆஜராகி வந்த அவர், 2004 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2018 நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.