scorecardresearch

மோசடி பத்திர பதிவு தொடர்பான வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

பதிவை ரத்து செய்ய கோரியும், மேல்முறையீடு செய்தும், விண்ணப்பித்திருந்த விண்ணபங்கள் நிலுவையில் உள்ளது

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்

பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பங்களை கையாள்வது தொடர்பாக நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கில்,பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பங்களை கையாள்வது தொடர்பாக நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், பத்திர பதிவு தொடர்பான நடைமுறைகளை சுற்றறிக்கையாக பிறப்பிக்க வேண்டும் என்றும் பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசுலோக்சனா என்பவர், மோடியாக பதிவு செய்யப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ரத்து செய்யுமாறு விண்ணப்பித்திருந்தார். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், ஏப்ரல் 17-ந் தேதி விண்ணப்பித்துவிட்டு அதன் மீது விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது நடைமுறை அல்ல என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நடைமுறை ஊழலுக்கு வழி வகுக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதி, இதேபோல் ஏராளமானோர் பதிவை ரத்து செய்ய கோரியும், மேல்முறையீடு செய்தும், விண்ணப்பித்திருந்த விண்ணபங்கள் நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து தங்களது விண்ணப்பங்கள் மீது உத்தரவு பெற வேண்டும் என்பது மற்ற விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற விண்ணப்பங்களுக்கு தனியாக எண் வழங்கி பதிவு செய்து அதற்காக ஒரு பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதி, இது போன் விவகாரங்களில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்றும், பத்திரப்பதிவு ரத்து செய்ய கோருவது தொடர்பான விண்ணப்பங்களை கையாள்வது தொடர்பாக விரிவான நடைமுறைகளை வகுத்து அவற்றை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், இந்த நடைமுறைகள் குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai high court new order to department head about deed fraud