/tamil-ie/media/media_files/uploads/2018/02/a380.jpg)
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவின் இரு மனைவிகளுக்கு விதிக்கப்பட்ட ஒராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1991-1996 ஆம் ஆண்டு அதிமுகவின் போடி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் வி.பன்னீர் செல்வம். இவர் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 21 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், வி.பன்னீர் செல்வத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், சொத்து சேர்க்க உதவியது, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகள் கீழ், குற்றஞ்சாட்டபட்ட பன்னீர் செல்வத்தின் இரு மனைவிகள் ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோருக்கு தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து 2007 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மூவரும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு பன்னீர் செல்வம் மரணமடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயசந்திரன், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் இரு மனைவிகளின் ஒராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை பெற்ற இருவரும் இரண்டு வாரத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும், தவறினால் அவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.