சென்னை துறைமுக பொறுப்பு கழக உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வெளிப்படை தன்மையுடனும், நேர்மையாகவும், தேர்வுப் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் காலியாக இருந்த 4 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, அங்கு பணியாற்றிய இளநிலை பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.
இதில் கலந்து கொள்ள பலர் விண்ணப்பித்திருந்த நிலையில், எந்தவொரு எழுத்து தேர்வும் நடத்தாமல் கல்வி தகுதி, அனுபவம், திறமையை அடிப்படையாக வைத்து நேர்முக தேர்வு நடத்தி 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய கோரி வேல்முருகன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 2010 ம் ஆண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து வேல்முருகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சசிதரன், மற்றும் வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எந்த விதிகளும் பின்பற்றாமல் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதே நடைமுறையே பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ரயில் இன்ஜீன் டிரைவர்கள் பணிக்கான தேர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், உதவி பொறியாளர் பணியிடங்களுக்காக 2009 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கனவே தேர்வு நடவடிக்கையில் கலந்து கொண்ட 36 பேரின் விண்ணப்பங்களை வெளிப்படை தன்மையுடன், நேர்மையாக பரிசீலித்து, 3 மாதங்களுக்கு தேர்வு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.