நீதித்துறையை சேர்ந்தவர்களே, நீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிட்டால் நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
18 எம்.எல்.ஏல்க்கள் வழக்கில் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தங்கத்தமிழ் செல்வன் விமர்சித்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்துள்ளதாக கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் முன் முறையிட்டார். அப்போது அவர், நீதிதுறை மீதும், நீதிபதிகள் மீதும் விமர்சனம் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், தலைமை நீதிபதியை விமர்சித்து தங்கத்தமிழ் செல்வன் அளித்த பேட்டி, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, நேர்காணல் காட்சிகள் அடங்கிய சிடி ஆதாரங்கள் நீதிபதி கிருபாகரனிடம் வழங்கினார்.
இதையடுத்து, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் நீதித் துறை சார்ந்தவர்களே, தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் விமர்சிப்பதை தடுக்காவிட்டால் நீதித் துறையின் தற்கொலைக்கு வழிவகுத்துவிடும் என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.