சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க உத்தரவிட கோரிய மனுவுக்கு மூன்று வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், 2010 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் 6.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டர், தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் போன்ற திட்டங்களுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யகிறது. எனவே இது போன்ற திட்டங்களுக்கு செலவு செய்யும் தமிழக அரசு, இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க வேண்டும். உத்தரபிரதேசம், டில்லி, மத்திய பிரதேச மாநிலங்களில் இன்சுலின் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. அதே போல் தமிழகத்தில் வழங்க உத்தரவிட வேண்டும். அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சர்க்கரை நோயையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் .
தமிழகத்தில் சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்து அதிக விலைக்கு விற்கப்படுவதால், இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் கூடுதல் செலவு செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இதனை போக்க அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இன்சுலின் மருந்து வழங்க கோரியும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை சேர்க்க கோரியும் அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். எனவே அதனை பரிசீலித்து இலவசமாக இன்சுலின் மருந்து வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.