வாகன விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டு தொகையை ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை - வண்டலூர் சுற்றுவட்டச் சாலையில் குன்றத்தூர் அருகில் 2013 ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், சபரிகிரீசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சபரிகிரீசன் குடும்பத்தினர், பூந்தமல்லி மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தெடர்ந்தனர், இதனை விசாரித்த தீர்ப்பாயம் 18 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
தீர்ப்பயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சபரி கிரீசனின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் தீர்ப்பாயம் குறைந்த அளவே இழப்பீடு வழங்கி உள்ளதாகவும் இதனை ரத்து செய்து கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, கார் ஓட்டுநரின் கவனக் குறைவு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது. வருமான வரிக் கணக்கின் அடிப்படையில், 34 வயதான சபரி கிரீசனின் வருமானம் ஆண்டுக்கு 6 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என தீர்மானித்து, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடியே ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 688 ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடாக ஸ்ரீராம் ஜென்ரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.