நீலம் புயலின் போது உயிர் காக்கும் படகு கவிழ்ந்து 6 கப்பல் ஊழியர்கள் பலியான சம்பவம் தொடர்பாக கப்பல் கேப்டன் சுனில் குமார் ராய்க்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீலம் புயலின் போது, சென்னை துறைமுகம் அருகே பிரதீபா காவேரி கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.புயலின் வேகம் அதிகரித்ததையடுத்து தங்களது உயிரை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் 22 கப்பல் ஊழியர்கள் உயிர் காக்கும் படகுகள் மூலம் கடலில் இறங்கினர்.
எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் 6 ஊழியர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கப்பல் கேப்டன் சுனில் குமார் ராய்க்கு எதிரான சாஸ்திரி நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கு சென்னை சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சுனில் குமார் ராய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஸ் சுந்தர், புயலின் போது கப்பலை நடு கடலுக்கு நகர்த்த வேண்டும் என கப்பல் கேப்டன் உத்தரவிட்டும் புயலின் வேகம் அதிகரித்ததால் கப்பல் கட்டுப்பாடு இழந்து கரையை நோக்கி சென்றதாகவும் இதனால், தறை தட்டி விபத்து ஏற்படும் முன்னர் உயிர் பிழைக்க கப்பலில் இருந்த 22 ஊழியர்கள் உயிர் காக்கும் படகில் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து 6 பேர் உயிர் இழந்ததாகவும் வாதிட்டார்.
இந்த 6 பேரின் மரணத்திற்கு கப்பல் கேப்டன் தான் காரணமாக இல்லாத நிலையில் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிட்டார்.
மனுதரார் தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கப்பல் கேப்டன் சுனில் குமார் ராய்க்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.