நீதிமன்ற உத்தரவின்படி, வாரத்தில் இரு நாட்கள் குழந்தையை தந்தையுடன் அனுப்பாத தாய்க்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தை நல்ல குடிமகனாக வளர தாய் - தந்தை இருவரின் அன்பும் தேவை என கருத்து தெரிவித்துள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழும் பெண், தன் குழந்தையை கடத்திச் சென்று விட்டதாக கணவர் மீது புகார் அளிக்க, அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கணவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கணவருக்கு முன் ஜாமீன் வழங்கியதுடன், வார இறுதி நாட்களில் குழந்தையை தந்தை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, குழந்தையை தாய் வசம் ஒப்படைத்த தந்தை, வார இறுதிநாட்களில் குழந்தையை காணச் சென்ற போது, அதற்கு தாய் மறுத்துள்ளார். இதையடுத்து, மனைவி மீது கணவன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி குழந்தையை தந்தையுடன் அனுப்பி வைக்காத தாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிஹார் இல்லத்திற்கு மார்ச் 28 ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த குழந்தை, தந்தையின் முகத்தைக் கூட காண விரும்பாததை பார்க்கும் போது, தாய் சொல்லிக் கொடுத்து அழைத்து வந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது எனச் சுட்டிக் காட்டியுள்ள நீதிபதி, பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து தற்போதைக்கு வேண்டுமானால் குழந்தையை தந்தையிடம் விடாமல் இருக்கலாம்... குறிப்பிட்ட வயதை குழந்தை எட்டும் போது, பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், அண்டை வீட்டு குழந்தைகளின் தந்தையை பார்த்து தந்தையை தேடும்... அப்போது அதை தாய் தடுக்க முடியாது என நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக வளர தாய் - தந்தை இருவரின் அன்பும், அரவணைப்பும் தேவை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.