தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு விசாரணை அடுத்த வாரம் தள்ளிவைப்பு.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் இருந்து அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மார்ச் 2 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் இந்த அரசாணையானது பிறப்பிக்கப்பட்டது. அங்கீகார சான்றிதழ் பெற இயலாத பள்ளிகளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அங்கீகார சான்றிதழ் பெறமால் பள்ளிகள் இயங்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த இடைக்கால தடையை நீக்குமாறு தமிழக கல்வித்துறை செயலாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யமுடியவில்லை என்றும் ஆவணங்களை கேட்டு பெற முடியவில்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தெரிவித்தார். மேலும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசுகளிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஸ்பராசுரன் ஏற்கனவே சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு கட்டணம் நிர்ணயம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பொருத்தமான அதிகாரம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கின் விரிவான வாதத்திற்காக அடுத்த செவ்வாய்கிழமை விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.