பொதுநல வழக்குகள் பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல! - ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

பொதுநல வழக்குகளை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்

பொதுநல வழக்குகளை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளும் வழக்கறிஞர் குமாஸதா தேவராஜன் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கத்தில் உள்ள புனித மெரி நர்சரி என்ற தனியார் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இயங்கி வருவதாகவும், ஆஸ்பட்டாஸ் சீட்டில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பள்ளியை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மாவட்ட கல்வி அதிகாரிக்கு தேவராஜன் வாட்ஸ் அப் மூலம் நீதிமன்ற நோட்டீஸ் நகலை அனுப்பியுள்ளார். பின்னர் இது தொடர்பாக அவரின் தொலைபேசியில் பேசியதாவும் அவரின் உதவியாளரை மிரட்டுவதாக மாவட்ட கல்வி அதிகாரி நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.

தேவராஜனின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவு நகலை வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். மேலும் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தின் அனுமதியின்றி இது போல் தனியாக எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் இந்த புகார் தொடர்பாக கல்வி அதிகாரியிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யக் கோரி விசாரித்து குற்றம் நிரூப்பிக்கபட்டால் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்தனர்.

மனுதரார் தேவராஜன் வழக்கறிஞர் குமாஸ்தா தொழிலை விடுத்து நீதிமன்ற கட்டிடத்தை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைத்து வருகிறார், என கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கை அவர் தனியார் பள்ளி மீதான முன்விரோதம் காரணமாகவே தாக்கல் செய்திருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சென்னை செம்பியத்தில் வசிக்கும் உங்களுக்கு எப்படி கத்திவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிலை குறித்து எப்படி தெரியும்?. பள்ளி நிர்வாகியை அழைத்து விசாரித்தால் மேலும் பல விசயங்கள் தெரியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேவராஜன் இந்த தவறான செயலுக்கு அவர் எதிர்காலத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்ய கூடாது என உத்தரவு பிறப்பிப்க்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், பொது நல வழக்கின் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தை கைவிட்டு வேறு நல்ல தொழிலை பார்க்குமாறு தேவராஜனிடம் நீதிபதிகள் கடுமையாக தெரிவித்தனர்.

மேலும், பெண்கள் தனக்கு மூன்றாவது நபர்கள் குறுஞ்செய்தி அனுப்புவதை விரும்பமாட்டார்கள் என்றும் ஒரு பெண் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணை அவரது அனுமதியின்றி பெற்று வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியது குற்றச்செயல் என நீதிபதி பவானி சுப்பராயன் கண்டனம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தேவராஜன் நீதிபதிகளிடமும், மாவட்ட கல்வி அதிகாரியிடமும் பகிரங்க மன்னிப்பும், நிபந்தனையற்ற மன்னிப்பும் பல முறை கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து அவரின் மன்னிப்பை ஏற்று கொண்ட நீதிபதிகள் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுகளை நீதிமன்றம் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பும் அந்த வேலைகளை நீங்கள் ஈடுபட வேண்டாம் என தெரிவித்தனர்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரி சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்புவதாகவும். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றப்படும் என தெரிவித்தார்.

இதன் பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் புகார் குறித்து விசாரணை நடத்தி, பள்ளிக்கு உரிய வாய்ப்பு அளித்து சட்டபடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

×Close
×Close