கொலை வழக்கில் சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த கோவை காவலர்க்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி தனது வழக்கறிஞர் நடராஜனின் என்பவரின் உதவியுடன், திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது சிங்காநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமை காவலர் ராபர்ட், ஓட்டுநர் வேலன் ஆகியோர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து, சந்தோஷை கைது செய்ததாக கூறப்படுகின்றது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் பார் கவுன்சில் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விரிவான அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக உயர்நீதிமன்றம் காவலர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு இது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி டி.ஜி.பிக்கு உத்தரவிட்ட பட்டு இருந்தது.
இந்நிலையில். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமை காவலர் ராபர்ட் ஓட்டுநர் வேலன் ( ஃபிரன்ட்ஸ் ஆஃப் போலீஸ் ) ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது மூன்று பேர் சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யபட்டது.
காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிக்குமார், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அனைத்து காவல்நிலையங்களுக்கும் டி.ஜி.பி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்ட்டுள்ளது. மேலும் எதிர் காலத்தில் நீதிமன்ற அறைகளில் சென்று கைது நடவடிக்கை ஈடுபட கூடாது. நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சம்பவம் நடைபெற்ற போது ஓட்டுநர், ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்ற அறைக்கு செல்லவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் குற்றவாளி சந்தோஷ் மீது சுமார் 10 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், ஒருவர் மீது வழக்கு அதிகமாக நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்யலாமா? யார் இந்த அதிகாரம் அளித்தது? என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்த தலைமை காவலரின் மன்னிப்பை ஏற்க மறுப்பதாகவும், அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் உத்தரவிட்டனர். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்த நீதிபதிகள் ஆய்வாளர், ஓட்டுநர் இருவரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டனர். தலைமைக் காவலர் ஒரு வாரத்தில் அபராதத்தை செலுத்தி அது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.