தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த கோரி, லண்டனில் பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதியை ஏற்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை மற்றும் நிதி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்துவதற்கு இரண்டு தவணைகளாக 22 கோடியே 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு நீதிபதி ராஜா தள்ளிவைத்துள்ளார்.